Logo

Current Affairs

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்
All Current Affairs

நீண்ட தூர ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன், மத்திய அரசு தயாரித்துள்ள, தரையில் இருந்து, நீண்ட துாரம் விண்ணில் சென்று இலக்கை தாக்கும், அதி நவீன ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.


டி.ஆர்.டி.ஓ., எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்ப உதவியுடன், தரையில் இருந்து, விண்ணில் பாய்ந்து சென்று தாக்கி, இலக்கை அழிக்க வல்ல, நவீன ஏவுகணைகளை வடிவமைத்து வருகிறது. இதில், நடுத்தர துாரம் செல்லும் ஏவுகணை, ஜூன் மாதம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தரையில் இருந்து, நீண்ட துாரம் பயணம் செய்து, விண்ணில் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.


ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து, இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்த சோதனைக்காக, சந்திப்பூர் ஏவுதளத்தை சுற்றி வசிக்கும் மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.

Reviews


 

ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் தயாரித்து இந்தியா

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அதிநவீன ஏவுகணைகள் பொருத்தக்கூடிய, பிரம்மாண்ட போர்க்கப்பல் துவக்கி வைக்கப்பட்டது. உலகின் சிறந்த போர்க்கப்பல்களுடன் ஒப்பிடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள, இதற்கு, 'மர்மகோவா' என, பெயரிடப்பட்டுள்ளது. 

கடற்படைக்கு தேவையான போர்க்கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டப்படி, அரசால் நடத்தப்படும், எம்.டி.எல்., எனப்படும், 'மஸ்கவான் டாக் ஷிப்பில்டர்ஸ்' நிறுவனம், அதிநவீன போர்க்கப்பல்களை தயாரித்து வருகிறது. 

இந்த நிறுவனம் தயாரித்துள்ள, இரண்டாவது பிரம்மாண்ட போர்க்கப்பலுக்கு, 'மர்மகோவா' என, பெயரிடப்பட்டுள்ளது. 

மர்மகோவா கப்பலை துவக்கி வைக்கும் விழா, மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் நேற்று நடந்தது. கடற்படை தளபதி, அட்மிரல் சுனில் லன்பாவின் மனைவி ரீனா, கப்பலை துவக்கி வைத்தார். அதையடுத்து, அரபிக் கடலில், மர்மகோவா கப்பல், முதல் முறையாக செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், சுனில் லன்பா பேசியதாவது: மத்திய அரசின், 'இந்தியாவில் தயாரியுங்கள்' திட்டத்தை நனவாக்கும் வகையில், உள்நாட்டிலேயே, பிரம்மாண்ட போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் சிறந்த போர்க்கப்பல்களுடன், இந்த கப்பலை ஒப்பிடும் வகையில், அதிநவீன அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

மர்மகோவா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல், இந்திய கடல் பகுதியை சிறப்பான வகையில் பாதுகாக்கும். டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து, கப்பலை வடிவமைத்தது. வருங்காலத்தில், இத்தகைய போர்க்கப்பல்கள் அதிகளவில் தயாரிக்கப்படும். 
எம்.டி.எல்., நிறுவனம், இந்தியாவில், நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும், ஒரே நிறுவனமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 

'ரேடார்' மையம்:
* தரையிலிருந்து, தரையில் உள்ள இலக்கையும், தரையிலிருந்து, விண்ணில் உள்ள இலக்கையும் தாக்கும் ஏவுகணைகளை, இந்த கப்பலில் பொருத்த முடியும்
* இந்த கப்பலில்இருந்து பாய்ந்து செல்லும் ஏவுகணைகள், இலக்கை துல்லியமாக சென்றடைந்து தாக்கும் வகையிலானவை
* இஸ்ரேல் நாட்டின், 'எம்.எப் - ஸ்டார்' எனப்படும், அதிநவீன கண்காணிப்பு ரேடார் மையம், மர்மகோவாவில் பொருத்தப் பட்டுள்ளது 
* கடல் பரப்பில், 300 கி.மீ., தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை, துல்லியமாக தாக்கவல்ல, 'பிரம்மோஸ்' சூப்பர்சானிக் ஏவுகணைகளும் இந்த கப்பலில் உள்ளன
* நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராக தாக்குதல் நடத்தக்கூடிய, இரண்டு ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் திறனும் இந்த கப்பலுக்கு உண்டு
* மர்மகோவா என்பது, கோவாவில் உள்ள பிரபலமான துறைமுகம் அமைந்துள்ள நகரத்தின் பெயர். உக்ரைன் நாட்டு இன்ஜின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்களில், தற்போதைய தயாரிப்பான மர்மகோவா மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தவல்லது. இதை போன்று, மேலும் நான்கு போர்க்கப்பல்கள், 29 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

மர்மகோவா கப்பல், 535 அடி நீளம் உடையது. மணிக்கு, 56 கி.மீ., வேகத்தில் செல்லும். இதில், உக்ரைன் நாட்டில் தயாரிக்கப்பட்ட, நான்கு நவீன, 'காஸ் டர்பைன் இன்ஜின்'கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பலில், 50 அதிகாரிகள், 250 மாலுமிகள் பணியாற்றுவர்.

Reviews


 

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

ஒலியின் வேகத்தை விட விரைவாகச் செயல்படக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று(மே 27) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அது துல்லியமாகத் தாக்கியதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் திறனுடைய இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஆற்றல் படைத்தது. இந்தியப் பாதுகாப்புப் படையின் மூன்று பிரிவுகளிலும் பிரம்மோஸ் ஏவுகணை சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Reviews


 

இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். தார்முக்லி ரோந்து கப்பல் இணைக்கப்பட்டது

ஐ.என்.எஸ். தார்முக்லி இந்தியாவின் முதல் ஃபாளோ ஆன் வாட்டர் ஜெட் கப்பலாகும். கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம் உருவாக்கியிருந்த இந்த கப்பல் தற்போது மீண்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அந்தமானில் உள்ள ஒரு தீவின் பெயரே இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. 320 டன் எடை கொண்ட இந்த கப்பல் 48 மீட்டர் நீளம் கொண்டது. அதிகபட்சமாக 30 நாட்டுகள் வரை வேகத்தில் செல்லக்கூடியது. முற்றிலும் உள்நாட்டிலேயே கட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த கப்பல் ஆழ்கடலில் அதிவேகத்தில் செல்லும் வலிமை வாய்ந்தது. 

இந்நிலையில், இந்த கப்பல் கிழக்கு பிராந்திய கடற்படையில் இன்று இணைக்கப்பட்டது. கிழக்கு பிராந்திய கடற்படை கமாண்டிங் துணை அட்மிரல் எச்.சி.எஸ். பிசித் உள்பட 4 முக்கிய கடற்படை உயரதிகாரிகள் மற்றும் 41 மாலுமிகள் முன்னிலையில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. 
Reviews


 

பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களுடன் 350 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து, இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிருத்வி-2 ஏவுகணை, ஒடிஸா மாநிலம், சாந்திப்பூரிலுள்ள தளத்தில் இருந்து புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை, சுமார் 9 மீட்டர் உயரம் கொண்டது. 500 முதல் 1,000 கிலோ அணு ஆயுதங்களுடன் தரையில் இருந்து புறப்பட்டு, 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை உடையது.

கடந்த 2003-ஆம் ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இவ்வகை ஏவுகணை, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சோதித்து பார்க்கப்படுவது வழக்கம்.

அதன்படி, ஒடிஸா மாநிலம், சாந்திப்பூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து பிருத்வி-2 ஏவுகணை புதன்கிழமை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானிகளின் கண்காணிப்பில் நடைபெற்ற இச்சோதனையின் போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை பிருத்வி-2 ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.

புதன்கிழமையன்று இரண்டு பிருத்வி-2 ஏவுகணைகளை பரிசோதித்துப் பார்க்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பர் கோளாறு காரணமாக 2-ஆவது ஏவுகணையை சோதிக்கும் முயற்சி கைவிடப்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக பிருத்வி-2 ஏவுகணை, கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Reviews